அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்

பெண்ணாடம், கடலூர் மாவட்டம்

pralayakeshvarar_temple

சுவாமி : பிரளயகாலேஸ்வரர்.

அம்பாள் : அழகிய காதலி (ஆமோதனம்பாள், கடந்தை நாயகி), மகாலட்சுமி, சண்டிகேஸ்வரி.

தீர்த்தம் : பார்வதி தீர்த்தம், கயிலை தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.

மூர்த்தி :  சௌந்தரேஸ்வரர், மெய்கண்டார், கலிக்கம்ப  நாயனார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர்,  விசுவேஸ்வரர், முருகன், சண்டேஸ்வரர்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

தலச்சிறப்பு : எங்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் உள்ள நந்தி ஊரை நோக்கி (சிவனுக்கு  எதிராக)  திரும்பி இருக்கிறது.  இக்கோயிலுக்குத் 'தூங்கானைமாடம்'(கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.  சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.  ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது.  கோயிலின்  முன் வாயிலில் தென்பகுதியில் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம்.  மதிலையடுத்து உள்ளே  நந்தவனம் உள்ளது.  வடபகுதியில் 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம்,  பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது. உள்ளே நுழைந்தால் பதினாறுகால்  மண்டபம்.  மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது.  மூலலிங்கம் சுயம்பு, சற்று உயரமானது, ஆவுடையார் சதுர  வடிவானது.  கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக்  கண்டு வணங்குமாறு சன்னல்கள் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது. சுற்றுப்பகுதியில்  உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.

மூலஸ்தானத்திற்கு வடபகுதியில் கட்டு மலை மேல்  சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி உள்ளது.  தனிக் கோபுரத்துடன் கூடய கோயில்.  ஏறுவதற்குப்  படிகள் உள்ளன.  அழகான கோபுரம் பலவகையானச்  சிற்பங்களைக் கொண்டது.  இக்கோபுர  வாயிலில் மேல்பக்கச் சுவரின்  தென்பகுதியில் மெய்கண்டார் கோயில் உள்ளது.  நேர் எதிரில்  கலிக்கம்ப  நாயனார் காட்சி தருகிறார்.  இந்நாயனார் அவதரித்த தலமிது.  மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழந்தவராவார்.  இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி  என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே  வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

நால்வர் சந்நிதிகள், சேக்கிழார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர்,  விசுவேஸ்வரர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.  கட்டுமலைக் கோயிலின்  கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மை சிலையுள்ளது.  தலமரத்தின்கீழ் சண்டேஸ்வரர் சந்நிதி.   அம்மன் சந்நிதி, சுவாமிக்கு வடபகுதியில் உள்ளது.  சண்டிகேஸ்வரி சந்நிதியுமுள்ளது.  ஆலயத்தில்  திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

  • கபிலை தீர்த்தம் - கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது.  காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி குளமாகியது என்பர். 
  • பார்வதி தீர்த்தம் - கோயிலின் முன் கீழ்த்தசையில் உள்ளது.  இதற்குப் பரமானந்ததீர்த்தம என்றும் பெயர் சொல்லப்படுகிறது. 
  • முக்குளம் - ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது.  
  • இந்திர தீர்த்தம் - ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது. 
  • வெள்ளாறு - இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தல வரலாறு : இக்கோவில் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில்.  இங்கு உள்ள  சிவனுக்கு தேவகன்னியர்(பெண்), காமதேனு(ஆ), வெள்ளையானை(கடம்), ஆகியோர் பூஜை  செய்து வழிபட்டதால் இவ்வூருக்கு பெண்ணாகடம் என பெயர் இருந்ததாக வரலாறு கூறப்படுகிறது.   இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள்(வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர்' எனப் பெயர்  பெற்றதென்பர்.  ஒரு முறை சிவன் உலகை அழிக்க முடிவெடுத்த போது சிவனை அணுகி தேவர்கள்  இத்தலத்தில் உயிர்களை காக்கும்படி வேண்டினர்.  சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்கமாறு  கூறினார்.  சிவனை பார்த்திருந்த நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை விழுங்கியது.  எனவே  இங்குள்ள சிவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என அழைக்கபடுகிறார்.

இந்திரனின் பூஜைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு  மகிழ்ந்து மலர்களால் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு அங்கேயே தங்கினர்.  மலர் வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப, தேவகன்னியர்களுடன் சேர்ந்து தானும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு அங்கேயே தங்கிவிட்டது.  காமதேனுவைத் தேடிச் செல்லுமாறு  இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, தானும் பூஜையில் கலந்து கொண்டு திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டடு அங்கேயே தங்கிவிட்டது.  பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு தேடிவந்து,  தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, தானும் சிவ பெருமானை  வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.   எனவே மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் பெண்ணாடம் எனப்பெயர் பெற்றது.

சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன.  கல்வெட்டுக்களில் இத்தலத்து  இறைவன் "தூகர்னை மாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுகின்றார்.  கோயிலுக்குப்  பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

வழிபட்டோர் தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன்.

பாடியோர் : சம்பந்தர், அப்பர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி 9.00 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : 

சித்திரை திருவிழா நடைபெறும்.

சித்திரைச் சதய விழாவில் அப்பர் சுவாமிகள் வைச சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது. 

அம்பாளுக்கு ஆடிமாத உற்சவம் சிறப்பாக நடைபெறும். 

ஆவணிமூல விழா,

நவராத்திரி,

சஷ்டி விழா,

தைப்பூசம்,

சிவராத்திரி,

பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

கோயில் முகவரி அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோவில்,

பெண்ணாடம் - 606 105, கடலூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஆனந்தா லாட்ஜ்,

(பஸ் ஸ்டாண்ட் அருகில்)

விருத்தாசலம்

 

2. சண்முகா லாட்ஜ், 

(பஸ் ஸ்டாண்ட் அருகில்)

விருத்தாசலம்

 

3. வசந்தா லாட்ஜ்,

கடை வீதி,

விருத்தாச்சலம்

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் அர்ச்சனா,

பஸ் ஸ்டாண்ட்,

விருத்தாசலம்.

 

2. கிருஷ்ண பவன்,

கடை வீதி,

விருத்தாச்சலம் 

 

3. கணேஷ் பவன்,

தென்கோடி வீதி,

விருத்தாசலம்

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
 பிரம்மபுரீஸ்வரர்
600m

அன்பில் பெருமாள்
1km

அப்பால ரங்கநாதர்
14.5km
சப்தரேஸ்வரர்
9.2Km
மருந்தீஸ்வரர்
10Km
அமரவர்னேஸ்வரர்
11.4km