அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்

சிதம்பரம், கடலூர்

Chidambaram-tillai-kali_temple

சுவாமி : அருள்மிகு தில்லைகாளியம்மன்.

மூர்த்தி : பிரம்ம சாமுண்டீஸ்வரி, விநாயகர், வீணை வித்யாம்பிகை, கடம்பவன தக்ஷண ரூபிணி. 

தலச்சிறப்பு : ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும்  அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும். 

தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.  தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது.  குங்குமத்தால் காப்பிட்டு உடல் முழுவதும் மறைக்கப்படுகிறது.  தம்மை வழிப்படுவோர்க்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம்  சூடி குறிப்பில் உணர்த்துகின்றாள்.  பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே  விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள் என்றும் கூறுவர்.  தில்லைகாளியம்மன் மகம் நட்சத்திரகாரர்களுக்கு அதிதேவதை ஆவாள், எனவே மகம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டால் மிகவும் சிறப்பு.

பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்” என்ற பெயரும் உண்டு. இவள் பிரம்மனை போல் நான்குமுகத்துடன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை” என்ற பெயரில்  சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி” என்ற  பெயரிலும் அருளுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க  முடியும்.

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, ஒவ்வொரு ஆண்டும்  வைகாசிப் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும்.  விழாவையொட்டி, அம்மனுக்கு  தினந்தோறும் காலை, மாலை நல்லெண்ணை, சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு  அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு தில்லைகாளியம்மன் தினந்தோறும் இரவு அலங்கரிங்கப்பட்ட சூரியபிரபை, சந்திரபிரபை, பூதகி வாகனத்தில் வீதியுலா, தெருவடைச்சான் உற்சவம், காமதேனு வாகனம்,  கைலாய, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.

விழாவில் முக்கியமானதாக 9–வது திருநாளான தேரோட்ட திருவிழா நடைபெறும்.   தில்லைக்காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்  நடைபெறும்.  திருத்தேரில் எழுந்தரித்த தில்லைக்காளியம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டு  திரளான பக்தர்கள் அம்மன் திருத்தேரை வடம்பிடித்து இழுப்பார்கள்.  தேர் 4 ரத வீதிகள் வழியாக  வரும்பொழுது திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்கின்றனர்.   பிறகு தில்லையம்மனுக்கு மண்டகப்படி தீபாராதனை நடைபெற்று கோவில் சன்னதியை  தில்லைக்காளியம்மன் சென்றடைவாள்.

இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப்  திருவிழா நிறைவடைகிறது.

தலவரலாறு : சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும்  சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை.  சக்தி நான் தான் சக்திமிக்கவள் என சிவனுடன்  விவாதம் செய்தாள்.  சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சினம் கொண்ட சிவன், "நீ  எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்" என்று சபித்து விடுகிறார்.  இதை சற்றும் எதிர்பார்க்காத  பார்வதி, தன் தவறுக்கு மனம் வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். “கோபத்தில் தந்த  சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது.   எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும்.  அதுவரை நீ உக்கிரத்தின்  உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.

ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. எனவே காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டினார்கள்.  காளிதேவி  அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள்.

மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து  தில்லையில் தவம் இருந்தாள்.  பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் சிவன் காட்சி  தராததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கடும் கோபம்  கொண்டாள்.  இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள்.  அத்துடன்  சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள்.

ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று  தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள்.  போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி.  “நான்  தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று  விடுகிறேன்” என்று கூறினாள்.  சிவபெருமானுக்கும்  காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை  அடைந்தது.  இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட  அரம்பித்தது.  யார் வெற்றி பெறுவார்கள் என்று  நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி  சமமாக ஆடினார்கள்.

சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார்.  ஈசன் செய்தது போல்  பெண்ணான காளி தேவி பல ஆயிரகணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது  எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக்  கொண்டாள்.

தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை.  “தந்திரமாக ஜெயித்ததை  எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது“ என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள்.   அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் "தில்லைக்காளி" என்ற பெயரில் அமர்ந்தாள்.  இவளை "எல்லைக்காளி" என்றும் சொல்வர்.  “நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே  இருக்கிறேன்.  என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள்.  இதனால் இன்னும் நீ  பெருமையடைவாய்" என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம்  தணியவில்லை.  சிவன் கூறியது போல் இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத்  தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.

பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க “தில்லைக்காளியை வேதநாயகி” எனப்  புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என  குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார்.  அதன்படி காளி, "பிரம்ம  சாமுண்டீஸ்வரி” என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி  தந்து தில்லையிலேயே அமர்ந்தாள் காளி.  அன்னை மகாகாளியை தில்லையம்மன் என்றே மக்கள்  அழைக்கிறார்கள். பலருக்கு குல தெய்வமாகவும் தில்லைகாளி திகழ்கிறாள்.  தில்லைகாளியை  வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க  அருள்புரிவாள்.

வழிபட்டோர் : பிரம்மா, தேவர்கள், முனிவர்கள். 

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல்பகல் 12.00 மணிவரை / மாலை 4.30 மணிமுதல்இரவு 8.30 மணிவரை

பூஜைவிவரம் : நான்குகாலபூஜைகள், ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் தில்லைகாளிக்கு சிறப்பு பூஜை நடக்கும்.

திருவிழாக்கள் :

வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

நவராத்திரி.

அருகிலுள்ளநகரம் : சிதம்பரம்.

கோயில்முகவரி : அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்,

சிதம்பரம் - 608 001, கடலூர் மாவட்டம்.

தொலைப்பேசிஎண் : 04144 - 230251.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஹோட்டல் அக்க்ஷயா 17,

18 ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட் சிதம்பரம்,

சிதம்பரம் - 608 001.

 

2.தி கிராண்ட் பார்க் #59,

ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,

நடராஜர் கோவில் எதிரில்,

சிதம்பரம் - 608 001.

 

3.கிராண்ட் பேலஸ்,

ஸ்டே12 ரயில்வே பீடர் ரோடு,

சிதம்பரம் - 608 001.

 

4.ஆர்.கே ரெசிடென்சி ஹோட்டல்,

30 வி.ஜி.பி ஸ்ட்ரீட்,

சிதம்பரம் - 608 001.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.அனுபல்லவி மல்டிகுசின் ரெஸ்டாரன்ட்,

வி.ஜி.பி. ஸ்ட்ரீட்,

19, சிதம்பரம்,

Ph : (04144) 221336.

 

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


விருதகிரீஷ்வரர்
45.2km

கங்கைகொண்ட சோழபுரம்
44.2km

கொளஞ்சியப்பர்
47.7km

பூவராக சுவாமி
37km

சிதம்பரம் நடராஜர்
1.8km