அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோவில் 

சிதம்பரம்

Chidambaram-nadrajar_temple

சுவாமி : நடராஜர், ஆதிமூலநாதர்.

அம்பாள் : சிவகாமசுந்தரி உமையாம்பிகை.

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் மற்றும் 6 தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : தில்லைவனம், ஆல்.

தலச்சிறப்பு : பஞ்சபூதத்தலத்தில் இது ஆகாயதிருத்தலம் ஆகும்.  வானத்தில் கலந்த சிவத்தை  கண்ணால் காண இயலாது.  எனும் தத்துவத்தை சிதம்பர ரகசியமாக கொண்ட ஆலயம்.  பொற்சபை, கனக சபை, தாரகவதம் புரிந்த காளியுடன் உற்தவ தாண்டவமாடிய சிவன்.  தில்லையில் வடக்கே எல்லைக் காளியாக்கிய தில்லையம்மன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.   நான்கு இராஜகோபுரங்கள், பொன்தகடு வேயப் பெற்ற கோபுரங்கள் உள்ள இக்கோவில் 4 ஏக்கர்  நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  அர்த்தஜாம பூஜை விசேஷமானது.  கோவில் மொத்த பரப்பளவு 16  ஏக்கர் ஆகும்.  சிதம்பரம் தரிசிக்க முக்தி தரும் சிறப்பானஆலயம்.  12 ராசிகள் மண்டப விதானத்தில் உள்ளது.

தலவரலாறு : இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற  அருவுருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார்.  சித்த சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது.அதனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். சித்+அம்பரம்=சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. “மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை" என்பது தான், அந்த ரகசியத்தின் பொருள். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.

இத் திருக்கோயில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பெற்றது. இதனை அழகுபடுத்தியவன் பல்லவ மரபினனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். தெற்குக் கோபுரம் சொக்கசீயன் என்ற முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் திருப்பணி செய்யப் பெற்றது.தில்லையில் சிவகங்கைக் கரையின் மேற்கே மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனால் கட்டப்பெற்றதே நூற்றுக்கால் மண்டபமாகும்.

பாண்டிய மன்னர் தம் குலநாயகராகிய சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திரு முன்னிலையில் முடி சூடிக்கொள்ளுதல் மரபாக இருந்தமையால், முடி சூடிக் கொள்ள சடையவர்மன் வீரபாண்டியன் இம் மண்டபத்தினை ஒட்டியே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைக் கட்டி அப்பெருமான் முன் நிலையில் கி.பி. 1267 ம் ஆண்டு வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டான். கண்டன் மாதவனால் கட்டப்பெற்ற புராண மண்டபத்தை உள்ளடக்கிய மண்டபமே ஆயிரக்கால் மண்டபம். இதனைக் கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என ஆராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார் கூறுகின்றார். இந்த ஆயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லைச் சிற்றம்பலம் பொன்னினால் வேயப் பெற்றதனால் பொன்னம்பலம் எனப் போற்றப்பெறுகின்றது. திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பன என்பர். அம்பலத்தின் முகட்டினில் இருபத்தோராயிரத்து அறுநூறு பொன்னேடுகள் வேயப் பெற்றுள்ளன. இவை,ஒவ்வொரு நாளும் மனிதராகிய நாம் விடும் மூச்சின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவன ஆகும். பொன்னேடுகளிற் பொருத்தப் பெற்றுள்ள ஆணிகள் எழுபத்து ஈராயிரம் ஆகும். மாந்தருடைய மூச்சின் இயக்கத்திற்கு ஆதாரமாகிய எழுபத்து இரண்டு நாடிகளை உணர்த்துவன ஆகும்.

"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, சிற்றம்பலம் சிற்சபை எனவும். அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை எனவும், கொடி மரத்தின் தெற்கேயுள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் சந்நதி நிருத்தசபை எனவும், சோமாஸ்கந்தர் முதலிய எழுந்தருளும் திருமேனியுள்ள சந்நதி தேவசபை அதாவது பேரம்பலம், ஆயிரக்கால் மண்டபம் இராசசபை எனவும் வழங்கப் பெறுகின்றன. இந்த ஐந்து சபைகளும் சோழ மன்னராலேயே திருப்பணி செய்யப் பெற்றுள்ளன.

கி.பி. 726 முதல் கி.பி. 775 வரை ஆட்சி புரிந்த நந்தீவருமப் பல்லவனால் பிரதிட்டை செய்யப் பெற்ற பெருமாள் சந்நதி தில்லை திருச்சித்திர கூடம் என்பதாகும். இது திருமங்கை யாழ்வாராலும் குலசேகராழ்வாராலும் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருத்தலமாகும்.

வழிபட்டோர் : முருகன், அருச்சுனன், திருமூலநாயனார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர், திருவிசைப்பா ஆசிரியர்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான்பெருமாள் நாயனார், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், திருவெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் நாயனார், தில்லைவாழந்தணர், திருநீலகண்ட நாயனார், திருநாளைப்போவார் நாயனார், கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், கோச்செங்கட் சோழநாயனார், முதல் வரகுணபாண்டியன், திருவதிகை மனவாசகங் கடந்தார், உமாபதி சிவாச்சாரியார்.

பாடியோர் : அருணகிரிநாதர், இரட்டைப் புலவர்கள், குருஞான சம்பந்தர், கண்கட்டி மறைஞான சம்பந்தர், புராணத் திருமலைநாதர், குமரகுருபர், வெள்ளியம்பலவாணர், படிக்காசுத்தம்பிரான், சித்தர் சிவப்பிரகாசர், அகோர சிவாச்சாரியர், தாயுமானார், மாரிமுத்துப் புலவர், முத்துத் தாண்டவர், ஞானப்பிரகாசர், கோபாலகிருஷ்ணபாரதியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், சிதம்பர இராமலிங்க வள்ளலார், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் 1.00 மணிவரை.

மாலை 4.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை.

அருகிலுள்ள நகரம் : சிதம்பரம்.

கோயில்முகவரி : அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,

சிதம்பரம்- 608 001. கடலூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04144 - 227171

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஹோட்டல் அக்க்ஷயா 17,

18 ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட் சிதம்பரம்,

சிதம்பரம் - 608 001.

 

2.தி கிராண்ட் பார்க் #59,

ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,

நடராஜர் கோவில் எதிரில்,

சிதம்பரம் - 608 001.

 

3.கிராண்ட் பேலஸ்,

ஸ்டே12 ரயில்வே பீடர் ரோடு,

சிதம்பரம் - 608 001.

 

4.ஆர்.கே ரெசிடென்சி ஹோட்டல்,

30 வி.ஜி.பி ஸ்ட்ரீட்,

சிதம்பரம் - 608 001.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.அனுபல்லவி மல்டிகுசின் ரெஸ்டாரன்ட்,

வி.ஜி.பி. ஸ்ட்ரீட்,

19, சிதம்பரம்,

Ph : (04144) 221336.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
தில்லை காளி
1.8km

பூவராக சுவாமி 
38Km

விருத்தகிரீஸ்வரர் 
46.2Km
கொளஞ்சியப்பர் 
48.8Km
வைதீஸ்வரன் 
24Km
பிரகதீஸ்வரர் 
41.7Km