அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்
திருபாம்புரம், திருவாரூர் மாவட்டம்
சுவாமி : சேஷபுரீஸ்வரர், பாம்புரேசுவரர், பாம்பீசர், பாம்புரநாதர்.
அம்பாள் : பிரபராம்பிகை, வண்டார் குழலி.
தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்.
தலவிருட்சம் : வன்னி மரம்.
தலச்சிறப்பு : திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். நாகராசன்(ஆதிசேஷன்) வழிபட்ட இத்தலம் பாம்பு+புரம் = “பாம்புரம்” திருப்பாம்புரம், எனப் பெயர் கொண்டது. திருநாகஸ்வரம், காலஹஷ்தி, கீழ்பெரும்பள்ளம் போன்ற நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் தரிசித்தாலே கிடைக்கும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்றது. இங்கு ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக காட்சியளிக்கின்றனர். இத்தலத்தில் பாம்புகள் வடிவில் இறையடியார்கள் வாழ்வதாக ஐதீகம். இத்தலத்தில் பாம்பு தீண்டுவதில்லை, அகத்தி பூப்பதில்லை, ஆலின்(ஆலமரம்) விழுது தரை தொடுவதில்லை. அன்னையின் மீதும் அப்பனின் மீதும் நாகம் சட்டை உரித்து மாலையாகச் சூட்டுகிறது.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு திசை நடந்தால், 7 வருட கேது திசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைப்படுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.
இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 15 உள்ளன. அவை இராஜராஜன், இராஜேந்திரன், திரிபுவனவீரதேவன், குலோத்துங்கன் III, சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தன. இத்தலம் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம் என வழங்கப்படுகிறது. இறைவன் திரும்பாம்புரமுடையார் (90 of 1911, 90 of 1911) எனவும், இறைவி மாமலையாட்டியாள் (90 of 1911, 90 of 1911) எனவும், விநாயகப் பெருமான் இராஜராஜப் பிள்ளையார் (91 of 1911) எனவும் வழங்கப்படுகின்றனர்.
இராஜராஜதேவன் காலத்தில் சோழியதரையவேளான் தாமோதரையனால் கோயில் 2 - ஆம் பிராகாரத்தில் மண்டபங் கட்டவும் இதனைப் பராமரிக்கவும் நிலமளிக்கப்பட்டது (99 of 1911). வசந்த மண்டபத்தை சரபோஜி மன்னனுடைய பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டிதராயன் கட்டினான். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.
தல வரலாறு : கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன.
சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
வழிபட்டோர் : அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.
பாடியோர் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்.
நடைதிறப்பு :
காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை,
ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை,
புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,
வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை.
பூஜை விவரம் :
4 கால பூஜைகள்.
காலசந்தி காலை 9.00 மணி,
உச்சிகாலம் பகல் 12.15 மணி ,
சாயரட்சை மாலை 5.15 மணி ,
அர்த்தசாமம் இரவு 8.00 மணி.
திருவிழாக்கள் :
1. மாசிமகம்- தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி வழிபாடு,
2. ராகு-கேது பெயர்ச்சியன்று விசேஷம்,
3. மாசிவராத்திரி அன்று இரவு நான்குகால சிறப்பு பூஜைகள்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்,
திருபாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல் - 612 203, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 0435-2469555
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் செல்வீஸ்(பி),
எல்.டி.டீ 2, கட்டுகார ஸ்ட்ரீட்,
சந்தமங்களம்,
திருவாரூர் - 610002,
Tel:04366 222 082.
2. அருண் ஹோட்டல்,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர் - 610 002.
3. ஹோட்டல் காவேரி,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர் - 610 004.
4.ஹோட்டல் எம்.எம்.எ,
3/364A, டாக்டர். கலைஞர் நகர்,
மன்னார்குடி ரோடு,
டி. நகர், வில்லாமல்,
திருவாரூர் - 610 001,
Ph:04366 220 219.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)