அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவில்
மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
சுவாமி : மாயூரநாதர் சுவாமி, வள்ளலார், கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்.
அம்பாள் : அபயாம்பிகை, அஞ்சல் நாயகி.
மூர்த்தி : விநாயகர், சுப்ரமணியர், மயிலம்மை, சப்த மாதாக்கள், நடராசர், அருணாசலேஸ்வரர், சுரதேவர், ஆலிங்கனசந்திரசேகரர், தெட்சிணா மூர்த்தி, பிரம்மன், பிச்சாடனார், கங்கா விசர்சனர், எண்திசைத் தெய்வங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்.
தீர்த்தம் : இடப, பிரம்ம, அகத்திய தீர்த்தம்.
தலவிருட்சம் : மாமரம்.
தலச்சிறப்பு : காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவை திருமயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் நான்கு பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும், உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது.
இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறம் திருக்குளம், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் உள்ளார். இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி உள்ளார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் உள்ளனர். இத்தலத்தில் சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் உள்ளனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு உள்ளார்.
நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் காரணமாக அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே தனி சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், "இத்தலத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் சிவபெருமான் அருளினார். லிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கௌரவிக்கும் விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்படுகிறது.
இத்திருக்கோவிலின் ஈசானதிசையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். உட்பிரகாரத்தில் இந்திர லிங்கம் அக்னி லிங்கம், வாயு லிங்கம், யம லிங்கம், வருண லிங்கம், சகஸ்ர லிங்கம், பிர்ம லிங்கம், ஆகாச லிங்கம், மற்றும் சந்திரன், இந்திரன், சூரியன், ஸ்ரீ மகா விஷ்ணு பைரவ மூர்த்தி ஆகியவர்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கங்களும், சிவலிங்க திருமேனியுடன் விளங்கும் நாதசர்மா, ஸ்ரீ அனவித்யாம்பிகை என 16 சிவலிங்கங்கள் சுற்றி இருக்கும் வகையில் வள்ளல் ஸ்ரீ மாயூரநாதர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அம்பாள் சன்னிதி தனியாக உள்ளது.
அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் கந்த சஷ்டியின் போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுறது.
நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் நடராஜருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது. மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர். பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள் சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.
மாயூரநாதர் சன்னிதிக்குத் தென்புறத்தில் கருவறையை ஒட்டி, குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சமாதி மீது சந்தன விநாயகர் எழுந்தருள, சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. 9 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 156 அடி உயரத்தில் விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தின் உள்மாடத்தில் அதிகாரநந்தி தன் துணைவியோடு திருமணக் கோலத்தில் காட்சித்தருகிறார்.
இத்தலத்தின் தனிச்சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல்நாளின் முடவன் முழுக்கு ஆகும். இந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் திருவண்ணாமலையை கிரிவலம் செய்த பயனை அடையலாம். மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது.
அன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம், இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம், துலா நீராடல் மூலம் பாவம் நீக்கும் தலம், மற்றும் திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள் வழிபட்ட ஆலயம், நந்திதேவர் தன் துணைவியோடு திருமணக்கோலத்தில் காட்சி தரும் அரிய தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில்.
தல வரலாறு : மயிலாடுதுறையில் உள்ள “பெரிய கோவிலாக” ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாயூரத்தின் கணவர் என்ற பொருளுடைய “மாயூரநாதசுவாமி” இக்கோவிலின் முதன்மை கடவுளாவார். இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.
பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.
இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம் பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள். சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.
மனம் இளகிய ஈசன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி தாண்டவத்தை, "மயூரதாண்டவம்” என்றும் கூறுகிறார்கள். சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார். மாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் மயிலாடுதுறை எனப் அழைக்கப்படுக்கிறது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர்.
புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறைபடிந்து உள்ளதால், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், “மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெறலாம்” என்று அருளினார்.
அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன. தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பன், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வட கரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாக்கட்டத்தில் காட்சித்தரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
துலா நீராடலில் முப்பது நாட்களும் மாயூரநாதர் காவிரிக்கு வந்து காட்சிதருவது சிறப்பம்சமாகும். துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒரு நாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. இதுவே முடவன் முழுக்கு என அழைக்கப்படுகிறது. செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு காவிரியில் நீராடி சிவபெருமானை வழிப்பட்டு அருள் பெறலாம்.
கி.பி. 1907, 1911-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் மன்னர்கள் காலத்து 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பராந் தகச் சோழன் (10-ம் நூற்றாண்டு), இரண்டாம் ராஜாதி ராஜன் (கி.பி. 1177), மூன்றாம் குலோத் துங்கன் (கி.பி. 1201), ராஜராஜ தேவன் (கி.பி. 1228), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1245), ஜடாவர் மன் சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர்களும் இந்த திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர்.
வழிபட்டோர் : அம்பாள், திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள், கங்கை, யமுனை.
பாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், அருணகிரிநாதர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : 6 கால பூஜை.
திருவிழாக்கள் :
ஐப்பசி விழாவில் சிவன் அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது,
வைகாசி வசந்த உற்சவம்,
கந்தர் சஷ்டி விழா.
அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.
கோவில் முகவரி : அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில்,
மயிலாடுதுறை அஞ்சல் – 609 001, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சோழா இன்,
105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,
தென்பதி,
சிர்காழி - 609 111,
Ph : 094444 93388.
2. ஐயர்பாடி ஹோட்டல்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
3. ஹோட்டல் ஆர்யபவன்,
ஓல்ட் என்.ஹெச்,
திருவள்ளுவர் நகர்,
தென்பதி,
சீர்காழி - 609 111.
4. மங்கள விலாஸ் ஹோட்டல்,
தென்பதி,
சீர்காழி.
5.கணேசன் ஹோட்டல்,
சீர்காழி.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
2. கார்டன் ரெஸ்டாரன்ட்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)