அருள்மிகு காமாட்சி திருக்கோவில்

மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்

kamatchi-amman_temple

 

சுவாமி : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).

தலவிருட்சம் : மாமரம்.

தலச்சிறப்பு : அம்மன் ஒற்றை காலில் தவம் செய்த இடம். இத்தலத்தில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்  காமாட்ஷி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர்வரிசை கணையாழியுடன் வந்த ஸ்ரீ  வைகுண்டப்பெருமாள் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி  அளிக்கிறார்.  பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடுவதும்  இத்திருக்கோவிலில் சிறப்பாகும்.

தல வரலாறு : அம்மன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளும் முன் இங்கு தவம் புரிந்து காஞ்சிக்கு  சென்றதாக வரலாறு.  ஆதிக்காமாட்சி, தவக்காமாட்சி என வேறு திருப்பெயர்களும் உண்டு.   கயிலாயத்தில் ஈஸ்வரனின் கண்களை ஈஸ்வரி விளையாட்டாக மூட பூலோகம் இருண்டு சகல  ஜீவராசிகளும் துன்பப்பட்டன.  அந்த பாவத்தை போக்க இப்பூவுலகில் மாமரங்கள் அடர்ந்த இம்மாங்காட்டில் பஞ்ச அக்னியில் இடது காலின் கட்டைவிரல் நுனியில் நின்று கடுந்தவம் புரிந்தாள்.  பிறகு  ஈஸ்வரன் வெள்ளீஸ்வரராக இத்தலத்தில் காட்சி அளித்தார்.  அதனால் காஞ்சியில் சிவசக்தி  சங்கமம் உலகுணர நிறைவேறியது. ஸ்ரீவெள்ளீஸ்வரருக்கு பார்கேஸ்வரர் என்ற வேறு  திருநாமமும் உண்டு.  கண் பார்வையிழந்த சுக்கராச்சாரியாருக்கு பார்வை தந்து காட்சி அளித்தார்.   பின் பல யுகங்கள் கழிந்தன.  எனினும் அன்னையின் தவ அக்னி வெப்பத்தால் இப்பூமி  வெப்பமானது.  ஜீவராசிகள் உயிர் வாழ அல்லலுற்றன.  அப்போது காலடியில் தோன்றிய ஞானி  ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் இத்தலத்திற்கு வருகை தந்தார்.  அன்னையின் ருத்ரம் தணியும்  வண்ணம் சிவசக்தி இருப்பிடமான அபூர்வமான அர்த்தமேரு என்னும் 43 திரிகோணங்கள் கொண்ட,  ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தருளினார்.  

பரிகாரம் : இவ்வாலயத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு எலுமிச்சை கனிகளை  எடுத்துக்  கொண்டு தொடர்ந்து 6 வாரங்கள் வரவேண்டும்.  அம்பாள் சன்னதியில் வைத்து தரும் ஒரு  எலுமிச்சை கனியினை வீட்டில் வைத்து பூஜை செய்திடல் வேண்டும்.  எலுமிச்சையின் ரூபத்தில்  அம்பாள் நமது இல்லத்திற்கு வருகை தந்து நம் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள்  என்பது ஐதீகம்.  வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அன்னைக்கு உகந்த  நாட்களாகும்.  அதனால் இங்கு திருமணமாகாத பெண்கள் மேலே சொன்ன பிரார்த்தனையை  செய்தால் நிச்சயமாக அம்பாளின் அருள் பெற்று விரைவில் திருமணம் நடைபெறும் என்பது  நம்பிக்கை.  திருமணம் ஆனவர்கள் மேற்படி பிரார்த்தனையை செய்து அம்பாளை நினைத்து  தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் அருளுவாள் அன்னை.  பக்தர்கள் தங்கள் எண்ணம்  ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடுவதும் இத்திருக்கோவிலில் சிறப்பாகும். வருகைத்தரும் பக்தர்கள் தவறாது ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று தரிசிப்பது நலம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.00 முதல் இரவு 9.30 மணி வரை.

குறிப்பு:- ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

சித்திரைத் திருவிழா - 10 நாட்கள்,

தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள்,

தீபாவளி,

பொங்கல் நவராத்திரி,

மாசி மகம்,

மகாசிவராத்திரி,

ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,

மாங்காடு - 600 122, காஞ்சிபுரம் மாவட்டம்.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

மயிலாப்பூர் சாய் பாபா
13.2km

பாடி திருவாலீஸ்வரர்
15km

வடபழனி முருகன்
16km

குன்றத்தூர் முருகன்
6km

திருவேற்காடு கருமாரி
6.3km
ஆஞ்சநேயர் நங்கநல்லூர்
16.8km