அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்
ராமநாதபுரம்
சுவாமி : கோதண்டராமர், லட்சுமணர்.
அம்பாள் : சீதா.
மூர்த்தி : இராமர், சீதா, லட்சுமணன், அனுமன், விபீஷ்ணன்.
தீர்த்தம் : ரத்னாகர தீர்த்தம்.
தலச்சிறப்பு : கோதண்டராமர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், "கோதண்டராமர்" என்றும், தலம் "கோதண்டம்" என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித ஸ்தலமாக இப்பகுதி கருதப்படுகிறது.
இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும். ராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, "விபீஷணாழ்வார்" என்கின்றனர் பக்தர்கள். அளவில் சிறிய இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் மட்டும் உள்ளனர்.
கெட்டஒழுக்கத்தைக் கடைபிடித்த ராவணனுக்குப் பதிலாக நல்ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம்.
தல வரலாறு : புராணக்கதையை உள்ளடக்கிய இக்கோயிலை சுற்றிலும் நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால் கடலுக்கு நடுவில் அமைந்துள்ளது போல் கோதண்டராமர் கோயில் காட்சியளிக்கிறது. விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
விபீஷணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் ராமர் (ராமன் வேண்டுகோளுக்கு இணங்க லட்சுமணன், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது). இதனைக் குறிக்கும் வகையில் இங்கு ஆயுதபாணியான ராமனது (கோதண்டராமனது) பெயரில் இந்தக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இராமநாதர் கோயிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர்.
வழிபட்டோர் : விபீஷணன்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று விசேஷ பூஜை, ஆனி மாத வளர்பிறை நவமியன்று விபீஷணர் பட்டாபிஷேகம்.
திருவிழாக்கள் :
ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா,
வைகுண்ட ஏகாதசி,
ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு.
இராமலிங்கப் பிரதிஷ்டையின்போது இராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், இராமன் இராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், இராமர் இலிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.
அருகிலுள்ள நகரம் : இராமேஸ்வரம்.
கோயில் முகவரி : அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்,
ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.
தொலைபேசி எண் : +91-4573 - 221 223
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)