அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

இராமேஸ்வரம்

Rameshwaram-Shivan_temple

சுவாமி :  இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்.

அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி, விசாலாட்சி, சீதை.

மூர்த்தி : இராமர், இலட்சுமணர், ஆஞ்சநேயர், இராமலிங்கம், காசி விஸ்வநாதர், நடராஜர், பெருமாள், சந்தானகணபதி, முருகன்.

தீர்த்தம் : கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.

1. மகாலட்சுமி தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்,

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்,

5. சங்கு தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்,

6. சக்கர தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் கிட்டும்,

7. சேது மாதவ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் ஸ்ரீராமபிரானால் சகலலெட்சுமி கடாட்சமும், சித்த சக்தியும் பெறலாம்,

8. நள தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் எத்துறையிலும் வல்லுனர் ஆகலாம்,

9. நீல தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடையலாம்,

10. கவாய தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மனவலிமை , தேக ஆரோக்கியம் கிடைக்கும்,

11. கவாட்ச தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள்.

12. கந்தமாதன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தி பெறுவர்,

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்,

14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயாத்ரி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்கும்,

17. சர்வ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்,

18. சிவ தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்,

19. சாத்யாம்ருத தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் ஆயுள் விருத்தி ஆகும், பிராமண சாபம் நிவர்த்தியாகும்,

20. சந்திர தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் கலையார்வம் பெருகும்,

21. சூரிய தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முதன்மை ஸ்தானம் கிடைப்பதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்,

22. கோடி தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) கிடைக்கும். இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுக்கிறது. கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

தலச்சிறப்பு : இராமநாதசுவாமி திருக்கோவில், இந்துமதக் கோவில்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இறைவனே இறைவனை வழிபட்ட பெருமை கொண்ட கோவில்  ஆகும். இத்தலம் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில்  ஒன்றாகும். இராமேஸ்வரம் இராமாயணகால வரலாற்றையுடைய கோவிலாக இருந்தாலும், இந்த  கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என  நம்பப்படுகிறது. இத்திருக்கோவிலின் புராணம் மற்றும் கட்டிட வரலாறு என இரண்டுமே  சிறப்பானது.

இராமேஸ்வரம் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய கோவிலாகும்.  865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய  இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது.  இதன் உயரம் சுமார் 126 அடி.   மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது.

இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை.  ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி,  விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன.   சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  இச்சந்நிதியில் சீதாதேவியால்  உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத்  திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.  இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு  இன்றும் காணலாம்.

சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது.  இதுவே அனுமன் கொண்டு  வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.  மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில்  இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.  இவர்களுக்கு எதிரே தெற்கு  நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.  அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் உள்ளார்.  தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி  அமைந்திருக்கிறது.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது.   இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே  சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.  தினமும் காலை 5.00 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில்,  ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.  இந்த அபிஷேகத்தை  தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த  ஸ்ரீசக்ரம் இருக்கிறது.  சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.  

இந்த ஆலயத்தின் மற்றொரு  சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம்  ஆகும். உலகிலேயே மிக  நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம்  உலகப்பிரசித்தி பெற்றதாகும்.   முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில்  இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி  முடிக்கப்பட்டது.  இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக  690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது.  உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649  அடியும், வடக்கு தெற்காக 395  அடி நீளமும் கொண்டது.  இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு  கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க  உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று  வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளது.  இந்த நடராஜர் ருத்திராட்ச  மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன.  அதில் ஒன்று இராமேஸ்வரம்.  மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன.  விபீஷணன், இராமருக்கு  உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.  இந்தப்  பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.  அவனுக்கு காட்சி தந்த சிவன்,  அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார்.   இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று.  இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி  இருக்கிறது.

இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள், மிகச் சிறப்பாகக் கருதப்படும் நான்கு தலங்கள்,  வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம்.  இவற்றுள்  முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும்.  நான்காவது தலமான ராமநாதம் ஒன்றே  சிவதலம் ஆகும். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார்.  சிவன்  சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுவது சிறப்பு.

காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்)  தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.  கங்கை  தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும்.  அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.  இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க  வேண்டும்.  சிலரால் இது முடிவதில்லை.  காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக,  கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது.  மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி,  இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.  ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.  சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக,  அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர்.  சீதையைத் தொட்ட பாவம் நீங்க,  அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.  எனவே, இந்த தீர்த்தம் “அக்னி  தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த  வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும்  சொல்லப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.  இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள இருபத்தி இரண்டு கிணறுகளே அதன் தனிச்சிறப்பு ஆகும்.  இந்த கிணறுகள் அனைத்தும் இராமரால் உருவாக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது.  இராமர் எய்த அம்புகள் விழுந்த ஒவ்வொரு  இடத்திலும் ஒரு கிணறு உருவானது.  இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை  வாய்ந்தவை.  அருகருகே இருந்தபோதும், ஒவ்வொரு கிணற்றின் நீருக்கும் சுவை, நிறம்,  உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுபடுகிறது.  புண்ணிய தீர்த்தங்களான இந்த இருபத்து  இரண்டு கிணறுகளிலும் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டால், நமது பாவங்கள் அனைத்தும்  கரைந்தோடி நமக்கு மோட்ச ம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய  வேண்டிய கடமையாக கருதப்படுகிறது.

தலவரலாறு : இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, சிவபக்தனான ராவணனை மாய்த்த பின்  ராமர் சீதையுடன் திரும்பி வரும் வழியில், இராவண சம்ஹாரத்தினால் தனக்கேற்பட்ட  பிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார்.  அகத்திய முனிவர்  தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால்  பிரம்மஹத்திதோஷம் நீங்குமென்று சொல்ல, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு  சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினார். ஆஞ்சநேயர் தனக்கு ஒன்றும், இராமருக்கும்  ஒன்றுமாக இரண்டு லிங்கங்களைப் கொண்டு வரும் பொழுது காலதாமதம் ஆனது.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் ஆஞ்சநேயர் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள்.  இராமபிரான் அந்த  சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.  இத்தலத்தில்  இராமர் முதலில் பிரதிஷ்டை செய்த இராமலிங்கேஸ்வரரே மூலவராக உள்ளார்.

ஆஞ்சநேயர், தான் வருவதற்குள் மணலால் ஆன ராமலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பெயர்த்து எடுக்க முயன்று, வால் அருந்து சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்துள்ளார்.  அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட  பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இராமபிரான் ஆஞ்சநேயரை சமாதானப்படுத்தி, ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வலிங்கத்தை,  முதலில் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார்.  மேலும் அனுமன்  கொண்டுவந்த விஸ்வலிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.  அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட  இராமநாதருக்கு பூஜை நடக்கிறது.  அனுமன் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த  லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.  இராமநாதர் சன்னதிக்கு  இடப்புறம் விஸ்வநாதர் சன்னதி உள்ளது. விசாலாட்சிக்கும் தனி சன்னதி உள்ளது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும்.  கைலாய மலையிலிருந்து ஆஞ்சநேயர் தனக்காக கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோயில்  நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

இவ்வாறு இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் இராமனால்  உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது.  தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி  ஆலயம் அமைந்துள்ளது.  பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம்  செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால்  எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.

இத்தலமானது மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது.  இத்தலத்தில் உள்ள சுவாமிகள் இராமேஸ்வரர், ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும்  அழைக்கப்படுகிறார்.

வழிபட்டோர் : இராமர், சீதை, இலட்சுமணர், ஆஞ்சநேயர்

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 4.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள், பள்ளியறை தீபாராதனை காலை 5.00 மணி,  ஸ்படிகலிங்க தீபாராதனை காலை 5.10 மணி, திருவனந்தல் தீபாராதனை காலை 6.00 மணி, விளாபூஜை காலை  7.00 மணி, காலசந்தி காலை 10.00 மணி, உச்சிகாலம் பகல் 12.00 மணி, சாயரட்சை மாலை 6.00  மணி, அர்த்தஜாமம் இரவு 8.30 மணி, பள்ளியறைபூஜை இரவு 8.45 மணி.

திருவிழாக்கள் :

ஆனி - ராமலிங்கபிரதிஷ்டைதிருவிழா,

ஆடி - திருக்கல்யாணஉற்சவம்,

மாசி -மஹாசிவராத்திரிதிருவிழா,

ஆடி- ஆடிஅமாவாசை,

வைகுண்ட ஏகாதசி,

ராமநவமி,

தை அமாவாசை நாட்களில் கோதண்டராமர் கருடவாகனத்தில் அக்னி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் அளிப்பார்.

அருகிலுள்ளநகரம் : இராமேஸ்வரம்.

கோயில்முகவரி : அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்,

இராமேஸ்வரம் - 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04573 - 221223, 221255, 221292.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1. ஹோட்டல் குயின் பேலஸ்,

என்.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில்,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 221 013.

 

2. ஹோட்டல் விநாயகா,

#5, ரயில்வே பீடர் ரோடு,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 222 361.

 

3. டைவிக் ஹோட்டல்ஸ் ராமேஸ்வரம்,

என்.ஹெச் - 49, மதுரைராமேஸ்வரம் ஹைவே,

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 223 222.

 

4. ஹோட்டல் கரிஷ் பார்க்,

3, மதுரை ராமேஸ்வரம் ரோடு,

பாரதி நகர், ராமநாதபுரம் - 623 503.

Ph : 094423 22030.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. ஹோட்டல் ஐஸ்வர்யா லக்ஷ்மி,

கிரௌண்ட் ப்ளோர், என். ஹெச் 45,

மதுரை - ராமேஸ்வரம் ரோடு, சாலை பஜார்.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


மங்களநாத சுவாமி 
68.5km 

லட்சுமண தீர்த்தம்
1.9km

அனுமான்
1.7Km

கோதண்டராமன்
11km

திருப்புல்லாணி
58km