அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில்
கன்னியாகுமரி
சுவாமி : பகவதி அம்மன்.
தீர்த்தம் : பாபநாச தீர்த்தம்.
தலச்சிறப்பு : முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை. காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பது இந்துக்களுக்கோர் சிறந்த விதியாகும். அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல் தனிப்பெரும் சிறப்பு. மிகச்சிறந்த சுற்றுலா மையம் ஆகும்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்தில் இருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள். 1892-ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்ட பின்பு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சில பௌவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் காணலாம்.
தலவரலாறு : கன்னியாகுமரி ஆலயத்தின் தலப்புராணம் தரும் செய்திகள் இவ்வாலயத்தைச் சுற்றி அழகுற அமைந்திருக்கும் இயற்கை அழகினை ஒத்த சிறப்புடையனவாகக் காட்டுகின்றன. இராமபிரான் ஆழ்க்கடல் கடந்து இலங்கை செல்வதற்கேற்ற இடம் தேடிக் குமரிமுனை வந்து முதலில் பாலம் போட, அது சரிவராததால் அன்னை பகவதியை தரிசித்து அருள் பெற்று இராமேஸ்வரம் சென்றதாகவும், அதுமுதல் குமரித்துறை “ஆதிசேது” எனப்பெயர் பெற்றதாகவும், கோவில் தலப்புராணம் கூறுகின்றது. குமரித்துறையில் நீராடுவோர், “ஆதிசேதோ: கன்னியாகுமரி க்ஷேத்ரே மாதுர் பிதுர் தீர்த்தே” என கங்கல்பம் செய்து கொள்வர். “குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை” என்ற மணிமேகலை ( 6:37) யின் அடிகளை ஆதாரமாக வைத்து வானரப் படைகள் முதன் முதலில் அணைக்கட்டிய இடம் இக்குமரிமுனைதான் எனக் கூறமுடிகிறது. குமரி மாவட்டத்தில் இராமன்துறை இராமன்புதூர் என்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்கள் நிலை குறித்து வருந்தி நின்றனர். இறைவன் தமது அருளாற்றலைக் கன்னி பகவதியாக உருவப்பெறச் செய்தார். பாணாசுரன் அழகின் உருவான தேவியைக் கண்ணுற்று அவள் மேல் மையல் கொண்டு தனது வலிமையால் தேவியைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். தனது வாளை உருவிக் பயமுறுத்தினான். அப்போதெல்லாம் அவனது முடிவு கன்னிப் பெண் ஒருத்தியாலேயே நிகழும் என்ற உண்மையை அவன் மறந்துவிட்டான். பராசக்தியான தேவி தன் வாளுடன் அரக்கனை எதிர்த்தான் தலை துண்டிக்கப்பட்டது. இந்தப் போரை நவராத்திரி விழாவின் போது சிறப்புற நடத்திக் காட்டுகின்றனர் “பரிவேட்டை” என்று அழைக்கப்படும் இத்திருவிழா காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும். குமரியம்மன் வாளைக் கொண்டு போராடும் காட்சி இக்கோவில் கருவறையின் கிழக்குச் சுவரில் படைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.
தன் குறிக்கோள் நிறைவேறியதும் கன்னி பகவதியார் சுசீந்திரத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கணவனாக அடைய ஒற்றைக்காலில் தவமிருந்தாள். இறைவனும் அவள் வேண்டுகோளை ஏற்று மணம்புரியத் தீர்மானித்தார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தேறின. மணமகன் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை என்ற காரணத்தால் கோபங்கொண்ட தேவியார் தனது ஏமாற்றத்தின் வேகத்தால் அங்குத் தயாரித்து வைத்திருந்த எல்லா பொருட்களையும் அழித்து கற்சிலையாகி நின்றுவிட்டாள். இவ்வாறு தேவியின் சாபத்தால் மாறிய பொருட்கள் தாம் இன்று கடலோரத்தில் பல நிறங்களில் காணப்படும் மணல்களாகும் என்று கூறுகிறது தலப்புராணம்.
நடைதிறப்பு : காலை 4.30 முற்பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 முதல் இரவு 8.15 மணி வரை
பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள். காலசந்தி - 8.00 மணி, அபிசேகபூஜை - 10.00 மணி, உச்சிக்காலம் - 11.30 மணி, சாயரட்சை - 6.30 மணிமாலை, அர்த்தசாமம் - 8.00 மணிஇரவு, சொந்தபூஜை - 8.15 மணிஇரவு.
திருவிழாக்கள் :
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள்
வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.
இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும்.
தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
அருகிலுள்ள நகரம் : கன்னியாகுமரி.
கோயில்முகவரி : அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில்,
கன்னியாகுமரி - 629 702, கன்னியாகுமரி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. தி கோபிநிவாஸ் கிராண்ட்,
நியர் சீஷோர்,
கன்னியாகுமரி,
தமிழ்நாடு - 629 702.
Ph : +91(0) 4652 24 61 61 / 24 62 62.
2. ஹோட்டல் மாதினி ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,
கன்னியாகுமரி - 629 702.
3. ஹோட்டல் சிங்கார் இன்டர்நேஷனல் 2.5 ஆப் 5 ஹோட்டல்,
5/22 மெயின் ரோடு,
கன்னியாகுமரி - 629 702.
4. ட்ரீ ஸ்சி ஹோட்டல் (பி) லிமிடெட்,
சீஷோர் கோவலம் ரோடு எதிரில்,
கன்னியாகுமரி - 629 702.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. தி ஓசன் ரெஸ்டாரன்ட்,
தி சீஷோர் ஹோட்டல் ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,
கன்னியாகுமரி, Ph : 9994121088.
2. அரோமா ரெஸ்டாரன்ட் 6/112 பி,
பீச் ரோடு, சன்செட் பாயிண்ட்,
ஸ்பர்சா ரிசோர்ட்,
கன்னியாகுமரி,
Ph : +91 04652 - 247041 / 42 / 43.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)